Mon, Jun27, 2022
Homeதேசியசெய்திகள்குலாப் சூறாவளி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம்; மழைக்கு வாய்ப்பு

குலாப் சூறாவளி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம்; மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது வட அகலாங்கு 18.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இத் தொகுதியானது மேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மாலையளவில் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் – தென் ஒடிசா கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 15.0N – 20.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80.0E – 90.0E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதோடு, இந்தப் பிரதேசத்தில் கடலில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான பிரதேசத்திற்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் பலத்தமழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க