இலங்கையின் வடக்கு கடற்பிரதேசத்தில் இலங்கை கடற்படை மூழ்கடித்த படகில் காணாமற்போன தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணம், காரைநகர், கோவிலம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகு விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்து மீட்கப்பட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
படகிலிருந்து மற்றுமொருவர் காணாமல்போயுள்ளதாகக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்திலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் மூவர், இலங்கை காரைநகர் – கோவிலம் கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
அதன்பின்னர், இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட அவர்கள் மூவரையும் சுற்றிவளைக்க முயன்றபோது கடற்படையினரின் கண்காணிப்புப் படகு மோதியதில் மீனவர்களின் விசைப் படகு கடலில் மூழ்கியுள்ளது.
இதனால் படகில் இருந்த மூன்று மீனவர்களும் கடலில் மூழ்கியுள்ளனர். பின்னர் அவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டதுடன், மற்றைய மீனவர் காணாமல் போயுள்ளார். காணாமல்போயுள்ள மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இருவரும் காரைநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இலங்கையின் வடக்கு கடற்பிரதேசத்தில் இலங்கை கடற்படை மூழ்கடித்த படகில் காணாமற்போன தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இறந்த மீனவர் ராஜ்கிரணுக்கு திருமணம் ஆகி 40 நாட்கள் தான் முடிந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கி இறந்த ராஜ்கிரண் வீட்டிற்கு அமைச்சர் மெய்யநாதன் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்ட 2 மீனவர்கள் குடும்பத்தினரையும் சந்தித்து தலா ரூ.50 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் 2 மீனவர்கள் மற்றும் இறந்த மீனவரின் உடல் தாயகம் வரும் வரை புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள் என மீனவ சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.