மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து விதவிதமான பரிசுகளை வென்றவண்ணம் உள்ளனர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் இருக்கும் பகுதிக்குள் மாடுகள் சென்றுவிடாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் பொலிஸார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், மாடு வெளியேறும் பகுதியில் நின்றுகொண்டு ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பாலமுருகன் என்ற 19 வயது இளைஞரை, அந்த வழியாக வந்த ஒரு மாடு முட்டித்தள்ளியது.
இதில் பலத்த காயமடைந்த பாலமுருகனை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பிற்பகல் நிலவரப்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 25 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 8 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 15 பேர் என மொத்தம் 48 பேர் காயமடைந்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.