- Advertisement -
கேரளாவில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கு, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் அருகே பூஞ்சார் பகுதியில் கேரள மாநில அரசுப்பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் அதில் இருந்த பயணிகள் ஓட்டுநர் இருக்கை வழியாக மீட்கப்பட்டனர்.
தொடுபுழாவில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 2 பேர் பலியானார்கள். கோட்டயம் – கொல்லம் இடையே சாலைகள் வெல்ல நீரில் அரிக்கப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வழி நெடுகிலும் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன.
பாய்ந்தோடும் வெள்ளத்துக்கு கேரளாவின் நெற்களஞ்சியமாக குட்டநாடு பகுதியும் தப்பவில்லை. வனப்பகுதியில் விடாமல் கொட்டி வரும் மழையால் மணிமாலயாறு, மீனச்சீல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 22 ஆறுகளில் தண்ணீர் கொட்டுகிறது. அதிரப்பள்ளி அருவியில் பெருக்கெடுத்து வரும் காட்டாறால் பல இடங்களில் பேரிரைச்சலுடன் தண்ணீர் பாய்கிறது.
ஆறுகள் கரைபுரள்வதால், முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், நீல நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலப்புழா, மலங்கரா, பரப்பார், அணைகள் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டைப் போல் பெருவெள்ளம் சூழ்ந்ததால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கையாக ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.