- Advertisement -
பீகாரில் பாலியல் வழக்கில் சிக்கிய நபர் 6 மாதங்கள் பெண்களின் துணிகளை துவைத்துத் தர வேண்டுமென நீதிமன்றம் நூதன நிபந்தனை விதித்துள்ளது.
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் லாலன் குமார். வயது 20. அக்கிராமத்தில் சலவை செய்யும் தொழில் செய்து வந்த லாலன் குமார் , ஒரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐந்து மாதங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், லாலன் குமார் தனது பிணை வழங்கக் கோரி ஜஞ்சர்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவர் அளித்திருந்த பிணை மனுவில், பெண்கள் மீது தனக்கு இருக்கும் மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக தொழில் ரீதியாக பெண்களுக்கு சமூக சேவை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 6 மாதத்திற்கு கிராமத்திலுள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் சொந்த செலவில் துவைத்து கொடுக்க வேண்டும் என நூதன நிபந்தனை விதித்து பிணை வழங்கினார். இந்த தீர்ப்பு அக்கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.