- Advertisement -
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன், கூலித் தொழிலாளி. இவரது மகன் புகழேந்தி (வயது 11). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்து என்பவரது வீட்டிற்கு வந்திருந்தான். இன்று காலை சிறுவன் புகழேந்தி தனது பாட்டி வீட்டில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
அப்போது அங்கிருந்து சுமார் 1½ கி.மீ. தூரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளியான 2 தோட்டாக்கள் மின்னல் வேகத்தில் வந்தன. அதில் ஒரு குண்டு வீட்டின் சுவரிலும், மற்றொரு குண்டு சிறுவன் புகழேந்தியின் இடது தலையிலும் பாய்ந்தது.
அடுத்த விநாடி சிறுவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். இதைப்பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை காரில் தூக்கிக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
உடனடியாக மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் தலைமை மருத்துவர்கள் சிறுவனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். சிறுவனின் இடது தலையில் மிகவும் ஆழமாக துப்பாக்கி குண்டு புகுந்துள்ளதால் அதனை அகற்றும் முதல்கட்ட சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் சிறுவன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கந்தர்வக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகம் கூறுகையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் சிறுவனை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் அருகிலேயே ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளதால் அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இடையில் சில மாதங்கள் கலெக்டர் தலையிட்டதன் பேரில் பயிற்சி மையம் மூடப்பட்டது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இன்று ஒரு சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது என்றார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.