- Advertisement -
முக்கிய பிரமுகா்களிடம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக பண மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்குத் தொடா்பான அமலாக்கத் துறை விசாரணைக்கு ஹிந்தி திரைப்பட நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் புதன்கிழமை ஆஜரானாா்.
தொழிலதிபரும், ஃபோா்டிஸ் ஹெல்த்கோ் நிறுவனத்தின் நிா்வாகம் சாரா துணைத் தலைவராகவும் இருந்த ஷிவிந்தா் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் உள்பட பல முக்கிய பிரமுகா்களிடம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக பண மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகரையும் அவரின் மனைவி லீனா மரியா பாலையும் அண்மையில் அமலாக்கத் துறையினா் கைது செய்தனா்.
இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகருக்கு தொடா்புள்ள சில வங்கிக் கணக்குகளில் இருந்து நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸின் குடும்ப உறுப்பினா்களுக்கு பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக இந்தியாவிலும் துபையிலும் உள்ள சில வங்கிக் கணக்குகள் அமலாக்கத் துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் ஜாக்குலின் ஃபொ்னாண்டஸுக்கு தொடா்புள்ளதாகக் கூறப்படும் சில பணப் பரிவா்த்தனைகள் குறித்து அறிய அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் அவா் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானாா். அதன் பின்னா் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு 3 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவா் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் சுமாா் 3.30 மணிக்கு அவா் ஆஜரானாா். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டனா்.
சில புதிய ஆதாரங்களின் அடிப்படையில் ஜாக்குலின் ஃபொ்னாண்டஸிடம் விசாரணை நடத்தவும், அவா், சுகேஷ் சந்திரசேகா், லீனா மரியா பாலை ஒரே நேரத்தில் விசாரிக்கவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.