தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் உள்ளிட்ட படங்களில் 2 நடிகைகளுமே மலையாள நடிகைகள்.
இதென்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை என்றும் தமிழில் இளம் நடிகைகளே இல்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கேரளாவின் இரிஞ்சலக்குடா பகுதியில் பிறந்து வளர்ந்த அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகமானார்.
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் கோலிவுட்டிலும் இவர் ஏற்கனவே அறிமுகமாகி உள்ளார். அதர்வாவுடன் தள்ளிப்போகாதே, ஜெயம் ரவியுடன் சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் டிராகன் படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் அனிகா சுரேந்திரன். அஜித்தின் ரீல் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவரை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்றே அழைத்து வருகின்றனர்.
நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், விஸ்வாசம் என நயன்தாராவுடன் இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக வளர்ந்துவிட்ட அனிகா சுரேந்திரன் ஹிப் ஹாப் ஆதியின் பிடி சார் படத்தைத் தொடர்ந்து தற்போது தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
25 வயதாகும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கேரளாவின் புன்குனாம் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர்.
ஒரு அடார் லவ் படத்தில் இவர் நடித்த அந்த கண்ணடிக்கும் காட்சி இவரை இந்தியளவில் பிரபலமாக்கியது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்க காத்திருக்கிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு, ஒரு ஜாதி ஜாதகம் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து அசத்திய கயாடு லோஹரும் டிராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால், இவர் கேரளாவை சேர்ந்தவர் கிடையாது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் நிலையில், டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அடுத்து அதர்வா முரளி நடிக்கும் இதயம் முரளி படத்திலும் இவர்தான் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல்.
டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களின் நடிகைகள் மட்டுமின்றி மேத்யூ தாமஸும் கேரளாவை சேர்ந்த மலையாள நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற மொழி நடிகர்கள் நம்ம மொழியில் நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டு நடிகைகளை பெரிதும் தவிர்த்து வருவது தான் பிரச்னைக்கு காரணமே என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.