2022 முதல் அரையாண்டு காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி சிறந்தி நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளதனூடாக, இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் எனும் தனது ஸ்தானத்தை மேலும் உறுதி செய்துள்ளது.
சவால்கள் நிறைந்த சந்தைச்சூழலில் இயங்கிய போதிலும், பிரதான பிரிவுகளில் நிறுவனம் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. 2022 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஆறு மாத காலப்பகுதிக்கான இடைக்கால நிதி அறிக்கையின் பிரகாரம், தேறிய வழங்கிய கட்டுப்பணம் மற்றும் வரிக்கு முந்திய இலாபம் முதல் முதலீட்டு வருமானம் மற்றும் செலுத்தப்பட்ட உரிமை கோரல்கள் வரையிலான சகல பிரதான பிரிவுகளிலும் முன்னேற்றத்தைப் பதிவு செய்திருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தேறிய வழங்கிய கட்டுப்பணம் 15 சதவீதத்தினால் அதிகரித்து ரூ. 7.52 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 6.54 பில்லியனாக பதிவாகியிருந்தது. வழமையான புதிய வியாபார கட்டுப்பணங்கள் மற்றும் வருடாந்த புதுப்பிப்பு கட்டுப்பணங்கள் போன்றவற்றில் இரட்டை இலக்க வளர்ச்சியினூடாக இந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்ய முடிந்திருந்தது.
துறையின் சிறந்த ஐந்து செயற்பாட்டாளர்கள் வரிசையில் வழமையான புதிய வியாபார கட்டுப்பண வளர்ச்சி வீதத்தில் இரண்டாமிடத்தை நிறுவனம் பதிவு செய்திருந்தது. 8 சதவீதமாக பதிவாகியிருந்த இந்தப் பெறுமதி, துறையின் சராசரி பெறுமதியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு அதிகமாகும்.
வருடாந்த புதுப்பிப்பு கட்டுப்பணங்கள் பிரிவில் இரண்டாவது உயர் வளர்ச்சிப் பெறுமதியை எய்தியிருந்தது. 18 சதவீத உயர்வை பதிவு செய்திருந்த இந்தப் பெறுமதி, இது துறையின் சராசரியை விட உயர்வானதாக காணப்பட்டது.
தேறிய வழங்கிய கட்டுப்பணப் பெறுமதியும் ரூ. 6.1 பில்லியனிலிருந்து ரூ. 7 பில்லியனாக அதிகரித்திருந்தது. நீண்ட கால ஆயுள் காப்புறுதி வியாபாரங்களினூடாக நிறுவனத்தின் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. தொழிற்துறை பெரும்பாலும் ஒற்றை தவணைக் கட்டண வியாபார வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.
ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், நிறுவனத்தினால் மொத்தமாக ரூ. 2.2 பில்லியன் உரிமை கோரல்கள் செலுத்தப்பட்டிருந்தன. கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 1.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீத அதிகரிப்பாகும்.
வரிக்கு முந்திய இலாபத்தில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. ரூ. 462 மில்லியனிலிருந்து ரூ. 614 மில்லியனாக 33 சதவீதம் உயர்ந்திருந்தது. வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 402 மில்லியனிலிருந்து ரூ. 480 மில்லியனாக உயர்ந்திருந்தது. இக்காலப்பகுதியில் முதலீட்டு வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியிருந்தமை காரணமாக இந்த இலாப வளர்ச்சி பெறப்பட்டிருந்தது.
தேறிய முதலீட்டு வருமானம் 19 சதவீதத்தினால் அதிகரித்து ரூ. 2.64 பில்லியனிலிருந்து ரூ. 3.13 பில்லியனாக அதிகரித்திருந்தது. உயர் வட்டி வீதத்துடனான சூழல் மற்றும் முதலீட்டு தந்திரோபாயத்தில் கவனம் செலுத்தியிருந்தமை போன்றன இதில் பங்களிப்புச் செலுத்தியிருந்தன. மொத்த தேறிய வருமான வளர்ச்சி ரூ. 9.10 பில்லியனிலிருந்து ரூ. 9.47 பில்லியனாக எல்லையளவில் உயர்ந்திருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் பெருமையடைந்திருந்தார். நெருக்கடியான பொருளாதாரச் சூழல் காணப்பட்ட போதிலும், நிறுவனம் தந்திரோபாயமாக செயலாற்றி, தொழிற்துறையின் முன்னோடி எனும் தனது ஸ்தானத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளது. இந்த சாதனையை பதிவு செய்வதில் பங்காற்றியிருந்த அனைத்து அணியினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
கோம்ஸ் மேலும் குறிப்பிடுகையில், நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாட்டில் பல்வேறு காரணிகள் தங்கியிருந்தன. இதில் எமது வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தந்திரோபாயம், வரையறைகளற்ற புதிய தலைமுறை டிஜிட்டல் அனுபவம் மற்றும் இலங்கையில் ஆயுள் காப்புறுதியை மாற்றியமைப்பது போன்றன அடங்குகின்றன. வாழ்க்கையை பரிபூரணப்படுத்தும் பல புத்தாக்கமான தீர்வுகளை நிறுவனம் தொடர்ந்து வழங்கி, இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுச் சேர்க்கும் என மேலும் குறிப்பிட்டார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிதி அதிகாரி ஆஷா பெரேரா குறிப்பிடுகையில், நிறுவனத்தின் முன்னாயத்தமான தந்திரோபாய நிதி முகாமைத்துவமானது, முதல் அரையாண்டு காலப்பகுதியில் பதிவாகியிருந்த நிதிப் பெறுபேறுகளில் அதிகளவு தாக்கம் செலுத்தியிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் பிரதான நிதிக் குறிகாட்டிகளில் வளர்ச்சியைப் பதிவு செய்வதற்கு இது உதவியாக அமைந்திருந்தது.
எமது நிதி அத்திவாரம் உறுதியானதாக அமைந்திருப்பதுடன், வினைத்திறனான நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகளைக் கொண்டுள்ளோம். அதனூடாக தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்ய முடிந்துள்ளது. என்றார்.
செயற்பாடுகளினூடாக நிறுவனத்தின் இலாபம் ரூ. 387 மில்லியனிலிருந்து ரூ. 521 மில்லியனாக 35 சதவீதம் உயர்ந்திருந்தது. பங்கொன்றின் மீதான உழைப்பு வீதம் ரூ. 0.68 இலிருந்து ரூ. 0.81 வரை உயர்ந்திருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் தனது சேவைச் சிறப்பு, சிறந்த தீர்வுகள் மற்றும் தொழில்நுட்ப ஆற்றல்கள் போன்றவற்றுக்காக நன்மதிப்பை வென்றுள்ளது. ஆரோக்கியம், ஓய்வூதியம், கல்வி மற்றும் முதலீட்டு போன்ற பிரிவுகளில் இதன் தீர்வுகள் காணப்படுகின்றன.
Also Read : இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
நிறுவனத்தின் முன்னணி செயற்திட்டமான – Clicklife டிஜிட்டல் பொறிமுறைக் கட்டமைப்பினூடாக, துறையில் அவசியமான புரட்சிகரமான தொழில்நுட்ப மாற்றங்களுக்கு வழியேற்படுத்தப்படும். பாரம்பரிய ஆயுள் காப்புறுதியை மாற்றியமைத்து, டிஜிட்டல் முறையிலமைந்த காப்புறுதிக் கட்டமைப்பை உருவாக்கியிருந்தது. காப்புறுதி தயாரிப்புகளை உள்வாங்கி, காப்புறுதித் திட்டங்களுக்கு சேவையளிப்பதை டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் நஷ்டஈடுகள் தொடர்பாடல்கள் மற்றும் பரிபூரண சுகாதார மற்றும் வாழ்க்கை முறை கட்டமைப்பை வழங்குதல் போன்றவற்றினூடாக இதை மேற்கொள்ள முன்வந்துள்ளது.
நிறுவனத்தின் பரிபூரண வாழ்க்கைமுறை app ஆன Clicklife இனூடாக இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் சேவையாற்றுவதில் புரட்சிகரமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தமது காப்புறுதியை இலகுவான முறையில் தமது கையடக்க தொலைபேசிகளில் எந்நேரத்திலும் எங்கிருந்தும் நிர்வகித்துக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது. app இன் புரட்சிகரமான ‘Get Fit’ உள்ளம்சத்தினூடாக, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பாவனையாளர்களுக்கு பின்பற்றக்கூடியதாக இருக்கும்.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையின் காப்புறுதித் துறையின் வரம்புகளை தொடர்ந்தும் நகர்த்தும் வகையில் இயங்குகின்றது. பரந்த கிளை வலையமைப்புடன் 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ந்தும் தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, இலங்கையில் காணப்படும் காப்புறுதி இடைவெளியைக் குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.
Also Read : நாட்டில் சீமெந்து பயன்பாட்டில் சரிவு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.