Sri Lanka News Live and Tamil Breaking News

ஒரு நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி; ஞானசார தேரர் விளக்கம்

0 7

- Advertisement -

“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டுள்ளதாக, அச்செயலணியின் தலைவர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஓர் அடிப்படைக் கொள்கைக் கட்டமைப்புக்குள் இருந்து அந்தப் பாத்திரத்தை நிறைவேற்றுவதோடு, எந்தவொரு குடிமகனும், இனம், மதம், சாதி அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் அடிப்படையில் சட்ட வேறுபாடுகளுக்கோ அல்லது வேறு விடயங்களிலோ பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது என்றும் தேரர் குறிப்பிட்டார்.

“ஒரே நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணி”இன் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு முதன்முறையாகத் தெளிவுபடுத்தும் வீடியோ தொழில்நுட்பத்திலான ஊடகச் சந்திப்பொன்று, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்றது.

இதன்போது தொடர்ந்துரையாற்றிய கலகொடஅத்தே ஞானசார தேரர், எந்த இனம், மதம் அல்லது அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, அவை எல்லாவற்றுக்கும் மேலாக முதலிடத்தில் நாட்டை முதன்மைப்படுத்திச் செயற்படுத்துவதாயின், அத்தகைய ஒரு நாட்டின் சட்டக் கட்டமைப்புக்கான அனைத்துக் கருத்துகளையும் செவிமடுக்க இந்தச் செயலணி தயாராக இருக்கின்றது என்றார்.

அத்துடன், இந்தப் பிரச்சினைகள் தொடர்பான பரந்துபட்ட தெளிவும் ஆழ்ந்த ஆய்வும், இந்த ஜனாதிபதிச் செயலணிக்கு உள்ளதென்றும், தேரர் குறிப்பிட்டார்.

நாட்டுக்கு ஏற்ற ஒரு சட்டத்தையும் நாட்டின் எதிர்காலச் சந்ததியை அடுத்த நூற்றாண்டிலும் அதற்கு அப்பாலும், ஒரு கொடியின் கீழ் பொருத்தக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதே நமது பொறுப்பாகவுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

“குறுகிய பிளவுகள் இல்லாத ஒன்றுபட்ட தேசமாக, பரஸ்பரம் கலாசாரம், சமய மரபுகளை மதித்து இணக்கமாக வாழும் தேசமே எமக்குத் தேவையாகவுள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம் என்றோ அல்லது பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்ற அடிப்படையிலோ பிளவுபடாது, அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு சட்டத்தை இந்நாட்டுக்குள் கட்டியெழுப்புவதற்கான சூழலை உருவாக்குவதே எமது பொறுப்பாகவுள்ளது.

இனம், மதம், மாகாண அடிப்படையிலான பிளவுகள் காரணமாக, இந்நாட்டின் இளையோர் சமுதாயமே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தச் செயற்பாடுகளின் போது இளைஞர் சமுதாயத்துக்கு விசேட இடமொன்று வழங்கப்படும் என்று தெரிவித்த தேரர், பல்கலைக்கழகம், உயர்க்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து இளைஞர், யுவதிகளும், தங்கள் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை இந்தச் செயலணிக்கு வழங்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, இது தொடர்பில் இந்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், மத மற்றும் சிவில் அமைப்புகள் மற்றும் குழுக்களுடனும் தங்களுடைய கருத்துகளைப் பரிமாற்றிக்கொள்ள தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த ஞானசார தேரர், மறைமுக நிகழ்ச்சி நிரல் இல்லாமல் வரும் அனைவருக்கும் கலந்துரையாடலுக்கான கதவுகள் திறந்திருக்கும் என்றார்.

இந்த அனைத்துக் கருத்துக் கணிப்புகளுக்குப் பின்னர், செயலணியின் கருத்துக்களும் பரிந்துரைகளும், உரிய காலத்துக்குள் ஜனாதிபதியிடம் முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும், தேரர் தெரிவித்தார்.

இலங்கைக்குள் ‘ஒரே நாடு; ஒரே சட்டம்” என்பதைச் செயற்படுத்துவதற்கான ஆய்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கான பொறுப்பு, “ஒரே நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணி”க்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அதன் உறுப்பினர் பேராசிரியர் சுமேத சிறிவர்தன, தவிர சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் இந்தச் செயலணிக்கு வழங்கப்படவில்லை என்றும் அது, அரசியலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More