இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடனும் மலையக பெருந்தோட்ட பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தனிவீடுகள், இன்று (04) பயனாளிகளிடம் கையளிக்கப்படும்.
இதற்கான நிகழ்வு. பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதனை, அலரிமாளிகையில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மெய்நிகர் (zoom) நிகழ்வின் ஊடாக ஆரம்பித்துவைப்பார். இதன்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் உடனிருப்பார்.
இராகலை லிடேஸ்டல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 166 தனிவீடுகள் உத்தியோகபூர்வமாக இன்று (04) கையளிக்கப்படும். தனி வீடொன்று 10 இலட்சம் ரூபாய் செலவில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், யூ.என்.எபிடாட் நிறுவனத்தால், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டது.
இராகலை லிடேஸ்டல் தோட்டப் பிரிவுகளான டியநில,மல்லியப்பு மற்றும் சூரியகாந்தி ஆகிய தோட்டங்களில், இயற்கை அனர்த்தங்களால், பாதிப்புக்கு உள்ளாகுமென இனங்காணப்பட்ட இடங்களில் வசித்தோரும், வீடு வசதிகளற்றவர்களுக்குமே தனிவீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
டியநில தோட்டத்துக்கு கடந்த வௌ்ளிக்கிழமை (01) விஜயம் செய்திருந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், கையளிக்கப்படவுள்ள வீடுகளை பார்வையிட்டனர்.
உலக குடியிருப்பு தினமான இன்று (04) இராகலை லிடேஸ்டல் தோட்டத்தில், 166 வீடுகளும் குயின்ஸ்பெரி மேல்பிரிவில் 54 வீடுகளும், ஹப்புத்தளை ஸாவூட் தோட்டத்தில் 54 வீடுகள், காலியில் கல்கஸ்கலவெலவில் 50 வீடுகளும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளும் கையளிக்கப்படவுள்ளன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.