நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
அத்துடன் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.