பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
மின்வெட்டு விவகாரம் தொடர்பில், மின்சாரம் மற்றும் வலுச்சக்தி துறைகளின் தலைவர்களுடன் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
நிலக்கரி மற்றும் புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இலங்கையின் நிலக்கரி கையிருப்பானது, மின்சார நெருக்கடியை ஏற்படுத்தாமல் நிர்வகிக்கப் போதுமானதாக உள்ளது. எரிபொருளில் இயங்கும் மின் உற்பத்தியை முகாமைத்துவம் செய்வதன் மூலம் மின்வெட்டைத் தடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
ஏற்பட்டுள்ள நிலைமையைச் சீர்செய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச் சக்தி அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் காமினி லொக்குகே, உதய கம்மன்பில, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.