இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி இன்று (ஜூலை 14) முதல் விழிப்புணர்வு வாரத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விழிப்புணர்வு திட்டம் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
பிரமிட் திட்டங்கள் நாட்டில் வேகமாகப் பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
“பிரமிட் திட்டங்கள் தற்போது வேகமாக பரவி வருகின்றன. இது மக்களின் அறியாமை காரணமாக ஏற்படுகிறது. எனவே, கல்வி அமைச்சகம், பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம், இலங்கை காவல்துறை, முப்படை தலைமையகம், பொது பாதுகாப்புத் துறை மற்றும் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த விழிப்புணர்வு வாரம் முன்னெடுக்கப்படுகிறது.
மக்கள் இந்த திட்டங்களில் ஈடுபடாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், பிரமிட் திட்டங்களின் பாதகங்களைப் பற்றிய தகவல்களை மற்றவர்களுடனும் பகிர்ந்து, அவர்களுக்கும் கல்வி அளிக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
அத்துடன், அங்கீகரிக்கப்படாத வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்ளும் நிறுவங்கள் – குறிப்பாக முதலீட்டு நிதிகள், கிரிப்டோ நிறுவனங்கள் மற்றும் கல்வித் திட்டங்கள் – அதிகரித்து வருவது குறித்து அவர் கவலை வெளியிட்டார்.
“நாட்டிலிருந்து அங்கீகரிக்கப்படாத முறையில் நிதியை சேகரிக்கும் பிரமிட் திட்டங்கள் மற்றும் மோசடியை முற்றிலும் நிறுத்துவதற்காக, உங்கள் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,“ என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதனுடன் தொடர்புடைய சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அதுகோரலவும் கருத்து தெரிவித்தார்.