போதைப்பொருள் குற்ற வழக்கில் தவறாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் தவறாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், நேற்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும் அவர் உயிருடன் இல்லை என, கல்கிஸ்ஸ சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
தெஹிவளை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட 6 வழக்குகளில் போதைப்பொருள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால், கல்கிசை நீதவான் நீதிமன்றம் நேற்று சந்தேக நபர்களை விடுவித்ததாகக் கூறினார்.
தவறான தடுப்புக்காவலில் இருந்து மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சந்தேக நபரும், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்பதை அவர் மேலும் வெளிப்படுத்தினார்.
இந்த நபர், மே 2024 இல் கைது செய்யப்பட்டு, பின்னர் 3200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததற்காகத் தடுத்து வைக்கப்பட்டார். இது பிணையில் வர முடியாத குற்றமென்பதால் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, மேல் நீதிமன்றத்தால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர், 2 மாதங்களுக்குப் பின், மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக, கீர்த்தி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை, அவர் எந்த போதைப்பொருளையும் வைத்திருக்கவில்லை என்று அறிவித்தது.