மராட்டிய மாநிலம் மும்பை ஆரே காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். தின்தோஷி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் பிணமாக மீட்கப்பட்டவர் மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பதும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்திரசேகரின் மனைவி ரஞ்சனா என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
அதாவது சந்திரசேகரின் மனைவி ரஞ்சனாவுக்கு ஷாருக் என்ற வாலிபருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ரஞ்சனா, ஷாருக்கை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இதுபற்றி அறிந்த சந்திரசேகர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சனா கணவரை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளார்.
இதற்காக சம்பவத்தன்று கள்ளக்காதலன் ஷாருக்கை வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு தனது கூட்டாளி மைனுதீன் என்பவருடன் வந்த ஷாருக் தூங்கிக்கொண்டிருந்த சந்திரசேகரை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை ஆரே காலனி பகுதியில் வீசிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் ரஞ்சனா மற்றும் மைனுதீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான ஷாருக்கை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.