மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணின் தோழிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த இளம்பெண், கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அப்பகுதியில் உள்ள தனியார் ஆய்வகத்துக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த டெக்னீஷியன், கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறிய வேண்டுமென்றால், பிறப்புறுப்பில் இருந்து மாதிரிகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு அப்பெண்ணும் உடன்பட்டதால், அப்பெண்ணின் புணர்புழையில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதனையடுத்து வீட்டுக்கு வந்தடைந்த அப்பெண், தனக்கு மேற்கொள்ளப்பட்ட வித்தியாச பரிசோதனையை தனது நெருங்கிய தோழிகள் மற்றும் மருத்துவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
அப்போது, கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் ஒருபோதும் பிறப்புறுப்பில் இருந்து எடுக்கப்படுவதில்லை என்றும், ஆய்வகத்தில் இருந்த டெக்னீஷியன் உன்னை ஏமாற்றியிருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பத்னேரா காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முறைகேடாக மாதிரிகளை எடுத்த டெக்னீஷியனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்தனர்.
இந்த தகவலை கேள்விப்பட்ட மகாராஷ்டிரா மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யஷோமதி தாக்கூர், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் மொத்தம் 12 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இரு தரப்பினரையும் விசாரித்த பிறகு, குற்றம் சாட்டப்பட்ட டெக்னீஷியனை பிரிவுகள் 354 மற்றும் 376 (வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.
அதனை தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இச்சம்பவத்திற்கு உள்ளூர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து 17 மாதங்களுக்குப் பிறகு தண்டனையை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.