- Advertisement -
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 20 நாள்கள் கடந்துள்ள போதும் மூதூர் பொலிஸாரால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த தரம் 8 இல் கல்வி பயிலும் 13 வயதான பாடசாலை மாணவி ஒருவர், 07.12.2021 அன்று இரவு அக்கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞனால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் 08.12.2021 அன்று சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை தங்கள் பிள்ளை தொடர்பாக எவ்விதத் தகவல்களும் இல்லை எனவும் கடத்தப்பட்டுள்ள தங்களது பிள்ளையைக் கண்டுபிடித்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் மன்றாட்டமாக கேட்டுக் கொள்வதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
சிறுமி கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கே உரியது எனவும் அதனை விரைவுபடுத்துவதற்காக மாகாண சிறுவர் நன்நடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தால் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் அனுப்பி வைத்திருப்பதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இச்சிறுமியை கடத்தியதாகக் கூறப்படும் இளைஞன், கடந்த வருடம் 13 வயதான இன்னுமொரு சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, இவ்வருடம் பெப்ரவரி மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில், மற்றுமொரு சிறுமியை கடத்திச் சென்றிருப்பது கிராம மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.