முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு பகுதியிலுள்ள பாழடைந்த வளவின் பற்றைக் காணிக்குள் இருந்து சனிக்கிழமை (18) சடலமாக மீட்கப்பட்ட 13 வயது சிறுமி, அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அல்லது கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலைக்கு இவரது குடும்ப அங்கத்தவர்கள் சென்றிருந்த நிலையில், யோகராசா நிதர்ஷனா (வயது 13) என்ற குறித்த சிறுமி, தாயாருடன் தனிமையில் வீட்டில் இருந்துள்ளார்.
குறித்த சிறுமி அருகில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் ஒளிரவிடப்பட்டிருந்த மின்குமிழ்களை நிறுத்த சென்ற போது கடந்த 15ஆம் திகதி காலை முதல் காணாமல் போயுள்ளதாக, அவரது தாயாரால் அன்றைய தினம் (15) மாலை 2 மணிக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
திருகோணமலையில் உள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற குறித்த சிறுமி, கடந்த ஜூலை மாதம் வீடு திரும்பியிருந்தார். அதன்பின்னர் அவர் வீட்டிலேயே குடும்பத்தினருடன் வசித்து வந்திருந்தார்.
காணாமல் போயிருந்த சிறுமி, தனது வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள பாழடைந்த வளவின் பற்றைக் காணி ஒன்றில் இருந்து, 18ஆம் திகதியன்று, சடலமாக மீட்கப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் ரி.பரஞ்சோதி முன்னிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவின் விசாரணையோடு, குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் சடலம் மீதான பரிசோதனைகள் இடம்பெற்ற நிலையில், சிறுமியின் பெண் உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என்று சட்ட வைத்திய அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அத்தோடு, சடலம் மீதான பரிசோதனையில் சிறுமி 2 மாத கருவுற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாரா, கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டாரா, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா போன்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதோடு, சிறுமியின் பெற்றோரும் விசாரணைக்காக நேற்று முன்தினம் (19), பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.