Bigg Boss Tamil 5 Grand Finale Updates: விஜய் டிவியில் 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ராஜு டைட்டிலை வென்றார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில், சின்னபொண்ணு, நமிதா, இசைவாணி, இமான் அண்ணாச்சி, நாடியா, வருண், ஐக்கி பெர்ரி, சிபி, நிரூப், பாவனி ரெட்டி, பிரியங்கா, ராஜு ஜெகன் மோகன், தாமரைச்செல்வி, அக்ஷரா, வருண், அபிநய், அபிஷேக், மதுமிதா, சுருதி என 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் மட்டுமல்லாமல், சஞ்சீவ், அமீர் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக உள்ளே வந்தனர்.
பிக் பாஸ் போட்டி விதிகளின்படி, நமிதா, இசைவாணி, இமான் அண்ணாச்சி, நாடியா, வருண், ஐக்கி பெர்ரி, அக்ஷரா, வருண், அபிநய், அபிஷேக், மதுமிதா, சுருதி, சஞ்சீவ், சிபி, தாமரைச்செல்வி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து 105வது நாள் சனிக்கிழமை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் டிவியில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் ஒளிபரப்பானது.
பிக்பாஸ் வீட்டில் இறுதிப் போட்டியாளர்களாக நிரூப், ராஜு, அமீர், பிரியங்கா, பாவ்னி 5 பேர் இருந்தனர். இவர்களில் ஒருவர் மட்டுமே ரசிகர்களின் ஓட்டு அடிப்படையில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட வேண்டும். அதனால், மக்களின் ஆதரவு யாருக்கு, பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் இறுதியில் ராஜுவும் பிரியங்காவும் மட்டுமே உள்ளே இருந்தனர். பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல்ஹாசன், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை வெளியே அழைத்து வந்தார்.
பின்னர், பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக ராஜுவை அறிவித்தார். அவருக்கு பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலும் 50 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. பிரியங்கா 2வது இடத்தைப் பிடித்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.