இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜுலி சங்கை நியமிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அமெரிக்க செனெட் சபை அங்கீகரித்துள்ளது.
ஜுலி சங் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தில் மேற்கு ஹெமிஸ்பியர் விவகாரப் பணியகத்தின் பதில் உதவிச்செயலாளராகப் பணியாற்றியிருப்பதுடன் இராஜாங்கத்திணைக்களத்தில் ஜப்பானிய விவகார அலுவலகத்தின் பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும் கம்போடியாவின் ஃபோம் பென்னில் அமைந்துள்ள அமெரிக்கத்தூதரக விவகாரங்களுக்கான பிரதி தலைவராகவும் தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் ஜுலி சங் செயற்பட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்கத்தூதரகங்களிலும் சீனாவிலுள்ள அமெரிக்க கொன்சியூலர் அலுவலகத்திலும் அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
ஜுலி சாங் கலிபோர்னியா – சான்டியேகோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டத்தையும் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான கொலம்பிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.