சூரியனின் மர்மங்களை அறிந்து கொள்ள சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கும் பார்க்கர் சோலார் புரோப் என்கிற விண்கலத்தை நாசா கடந்த 2018-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.
பார்க்கர் விண்கலனை மீண்டும் மீண்டும் சூரியனுக்கு மிகவும் அருகில் அனுப்பி, அதை கடந்து செல்ல வைப்பதே இந்த சாகச திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த நிலையில் பார்க்கர் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து வரலாறு படைத்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் “வரலாற்றில் முதன்முறையாக ஒரு விண்கலம் சூரியனை தொட்டுள்ளது. நாசாவின் பார்க்கர் சோலார் புரோப் விண்கலம் இப்போது சூரியனின் மேல் வளிமண்டலத்தில் கொரோனா வழியாக பறந்து அங்குள்ள துகள்கள் மற்றும் காந்தப்புலங்களை மாதிரி எடுத்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதி சூரிய கொரோனா என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பார்க்கர் சோலார் புரோப் விண்கலம் சூரிய கொரோனா வழியாக தனது பயணத்தை தொடரும் என்றும், பூமியில் இருந்து ஆய்வு செய்ய முடியாத தகவல்களை அது, விஞ்ஞானிகளுக்கு வழங்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதமே நிகழ்ந்திருந்தாலும், பார்க்கர் விண்கலம் சூரிய கொரோனா வழியாகத்தான் கடந்து சென்றது என்பது, தரவுகளின் பகுப்பாய்வுகள் மூலம் இப்போதுதான் உறுதி செய்யப்பட்டது என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.