ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தின் இரண்டாம் நாளில் இங்கிலாந்தின் லிவிங்ஸ்டன் அதிகபட்சமாக ரூ. 11.50 கோடிக்கு பஞ்சாப் அணியில் ஒப்பந்தமானார்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் 15வது சீசன் இந்த ஆண்டு நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட 8 அணிகளுடன் இம்முறை புதிதாக லக்னோ, குஜராத் சேர்த்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான வீரர்கள் ‘மெகா’ ஏலம், கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடந்தது.
74 வீரர்கள்: முதல் நாள் ஏலத்தில், 10 அணிகள் சார்பில் 74 வீரர்கள் வாங்கப்பட்டனர். இதில் இஷான் கிஷான் (ரூ. 15.25 கோடி, மும்பை), தீபக் சகார் (ரூ. 14 கோடி, சென்னை), ஸ்ரேயாஸ் ஐயர் (ரூ. 12.25 கோடி, கோல்கட்டா), ஷர்துல் தாகூர் (ரூ. 10.75 கோடி, டில்லி) உள்ளிட்டோர் அதிக விலைக்கு ஒப்பந்தமாகினர்.
நேற்று, இரண்டாம் நாள் ஏலம் நடந்தது. முதல் நபராக ஏலத்தில் வந்த தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம், ரூ. 2.60 கோடிக்கு ஐதராபாத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் ரகானேவை, அடிப்படை தொகையான ரூ. ஒரு கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது.
லிவிங்ஸ்டனுக்கு ‘ஜாக்பாட்’: இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ லியம் லிவிங்ஸ்டனை ஏலத்தில் எடுக்க ஐதராபாத், குஜராத், பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. முடிவில் பஞ்சாப் அணி, ரூ. 11.50 கோடிக்கு தட்டிச் சென்றது. இரண்டாம் நாளில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரானார். அதன்பின் ஏலத்தில் வந்த விண்டீஸ் ‘ஆல்–ரவுண்டர்’ ஒடியன் ஸ்மித்தை, பஞ்சாப் அணி ரூ. 6 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணி, ‘ஆல்–ரவுண்டர்’ ஷிவம் துபேவை ரூ. 4 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. தமிழகத்தின் விஜய் சங்கர் (ரூ. 1.40 கோடி), வேகப்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவ் (ரூ. 1.70 கோடி) ஆகியோரை புதிய வரவான குஜராத் அணி வாங்கியது.
ஜூனியர் சாம்பியன்கள்: இந்தியாவுக்கு ஜூனியர் உலக கோப்பை (19 வயது) பெற்றுத் தந்த கேப்டன் யாஷ் துல் (ரூ. 50 லட்சம், டில்லி), ராஜ் பாவா (ரூ. 2 கோடி, பஞ்சாப்), ராஜ்வர்தன் (ரூ. 1.50 கோடி, சென்னை), விக்கி (ரூ. 20 லட்சம், டில்லி) ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
ஆர்ச்சருக்கு அதிர்ஷ்டம்: பத்து அணிகள் தேர்வு செய்த 106 வீரர்களுக்கு ஏலம் நடத்தப்பட்டது. இதில் நியூசிலாந்தின் கான்வே (ஒரு கோடி), மிட்சல் சான்ட்னர் (ரூ. 1.9 கோடி), தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியஸ் (ரூ. 50 லட்சம்) ஆகியோரை சென்னை அணி ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ ஜோப்ரா ஆர்ச்சரை வாங்கி ஐதரபாாத், மும்பை அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. முடிவில் மும்பை அணி ரூ. 8 கோடிக்கு வாங்கியது. விண்டீஸ் ‘ஆல்–ரவுண்டர்’ ரொமாரியோ ஷெப்பர்டை, ரூ. 7.75 கோடிக்கு ஐதராபாத் ஒப்பந்தம் செய்தது.
மீண்டும் வாய்ப்பு: விலைபோகாத வீரர்கள் பட்டியலில் இருந்த டேவிட் மில்லர் (ரூ. 3 கோடி, குஜராத்), சாம் பில்லிங்ஸ் (ரூ. 2 கோடி, கோல்கட்டா), விரிதிமன் சகா (ரூ. 1.9 கோடி, குஜராத்), மாத்யூ வேட் (ரூ. 2.4 கோடி, குஜராத்), உமேஷ் யாதவ் (ரூ. 2 கோடி, கோல்கட்டா), டிம் சவுத்தீ (ரூ. 1.5 கோடி, கோல்கட்டா), கருண் நாயர் (ரூ. 1.40 கோடி, ராஜஸ்தான்), எவின் லீவிஸ் (ரூ. 2 கோடி, லக்னோ), அலெக்ஸ் ஹேல்ஸ் (ரூ. 1.5 கோடி, கோல்கட்டா), லுங்கிடி (ரூ. 50 லட்சம், டில்லி), கிறிஸ் ஜோர்டன் (ரூ. 3.60 கோடி, சென்னை) ஒப்பந்தமாகினர்.
சென்னை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்.
தோனி, ரவிந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, தீபக் சகார், அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, ஆசிப், டுவைன் பிராவோ, கான்வே, மிட்சல் சான்ட்னர், ஆடம் மில்னே, டுவைன் பிரிட்டோரியஸ், கிறிஸ் ஜோர்டன், ஷிவம் துபே, ஜெகதீசன், ஹரி நிஷாந்த், துஷார் தேஷ்பாண்டே, பிரஷாந்த் சோலங்கி, ராஜ்வர்தன், சிம்ரன்ஜீத் சிங், மஹீஷ் தீக்சனா, பகத் வர்மா, முகேஷ் சவுத்ரி, சுப்ரான்ஷு சேனாபதி.
தேறினார் ஹக்
ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தை பிரிட்டனை சேர்ந்த ஹக் எட்மியாடெஸ் நடத்தினார். முதல் நாள் ஏலத்தின் போது திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு காரணமாக மயங்கி விழுந்த இவர், பாதியில் விலகினார். இவருக்கு பதிலாக இந்திய வர்ணனையாளர் சாரு சர்மா ஏலத்தை நடத்தினார். நேற்றைய இரண்டாம் நாள் ஏலத்தையும் சாரு சர்மா தொடர்ந்து நடத்தினார். சிகிச்சைக்கு பின் தேறிய எட்மியாடெஸ், நேற்று மாலை கடைசி நேரத்தில் ஏலத்தை நடத்தினார். இவருக்கு, அணி உரிமையாளரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மும்பையில் சச்சின் மகன்
இந்திய ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜுன். வேகப்பந்துவீச்சாளரான இவரை, மும்பை அணி ரூ. 30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது.
விலைபோகாத புஜாரா
இரண்டாம் நாள் ஏலத்தில் இந்தியாவின் புஜாரா, இஷாந்த் சர்மா, சவுரப் திவாரி, சச்சின் பேபி, இங்கிலாந்தின் டேவிட் மலான், இயான் மார்கன், ஆஸ்திரேலியாவின் லபுசேன், ஆரோன் பின்ச், ஆடம் ஜாம்பா, ஆன்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன், நியூசிலாந்தின் கோலின் மன்ரோ, மார்டின் கப்டில், விண்டீசின் ஷெல்டன் காட்ரெல் ஆகியோரை எந்த ஒரு அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
விலைபோகாத வீரர்கள் பட்டியலில் இருந்த சில வீரர்களை தேர்வு செய்து மறு ஏலம் நடத்தப்பட்டது. இப்பட்டியலில் இந்தியாவின் சுரேஷ் ரெய்னா இடம் பெறவில்லை. இதனால் இவர், இம்முறை ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பது சந்தேகம்.
யார் இவர்
பஞ்சாப் அணியால் ரூ. 11.50 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ லியாம் லிவிங்ஸ்டன் 28. இதுவரை 3 ஒருநாள் (72 ரன், ஒரு விக்கெட்), 17 சர்வதேச ‘டி–20’ (285 ரன், 12 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல்., அரங்கில் ராஜஸ்தான் அணிக்காக (2019–21) ஒன்பது போட்டிகளில் (112 ரன், 0 விக்கெட்) பங்கேற்றுள்ளார்.
இரட்டை மகிழ்ச்சி
மகாராஷ்டிராவை சேர்ந்த ஆல்–ரவுண்டர்’ ஷிவம் துபேவுக்கு நேற்று மகிழ்ச்சியான நாள். இவரது மனைவி அஞ்சுமிற்கு காலையில் ஆண் குழந்தை பிறந்தது. மாலையில் நடந்த ஏலத்தில் சென்னை அணி ரூ. 4 கோடிக்கு துபேவை தேர்வு செய்தது. இரட்டை மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட துபே கூறுகையில்,‘‘வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி அரங்கேறும் நேரம் இது. எனக்கு மகன் பிறந்துள்ளான்,’’என தெரிவித்துள்ளார்.
‘டாப்–5’ வீரர்கள்
இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தமான வீரர்கள வரிசையில் இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ லியாம் லிவிங்ஸ்டன், ரூ. 11.50 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். அடுத்த நான்கு இடங்களில் டிம் டேவிட் (ரூ. 8.25 கோடி, மும்பை), ஜோப்ரா ஆர்ச்சர் (ரூ. 8 கோடி, மும்பை), ஷெப்பர்டு (ரூ. 7.75 கோடி, ஐ தராபாத்), ஒடியன் ஸ்மித் (ரூ. 6.50 கோடி, பஞ்சாப்) உள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.