அகமதாபாத்: ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அறிமுக சீஸனிலே கோப்பையை வென்ற அணி என்ற பெருமை குஜராத்துக்கு கிடைத்துள்ளது.
2022 ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, அந்த அணியின் துவக்க வீரர்களான ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 31 ரன்கள் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த படிக்கல் 2 ரன்கள் மட்டுமே எடுத்து பெவுலியன் திரும்பினார்.
ஹெட்மயர் 11 ரன்களுக்கும், அஷ்வின் 6 ரன்களுக்கும், போல்ட் 11 ரன்கள், மெக்காய் 8 ரன்கள், ரியான் பராக் 15 ரன்கள் என சொற்ப ரன்னில் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக 35 பந்துகளில் 39 ரன்கள் விளாசி பட்லர் ஆட்டமிழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான்.
குஜராத் அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். முகமது ஷமி, தயாள், ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சுப்மன் கில் 45 ரன்னிலும் டேவிட் மில்லர் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் நெருக்கடியான தருணத்தில் 34 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார் ஹர்திக் பாண்ட்யா ராஜஸ்தான் தரப்பில் பந்துவீச்சாளர் சஹால் 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் சீஸனில் இந்தாண்டு புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக தொடரிலே கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது. கடந்த உலகக்கோப்பை தொடரில் ஜொலிக்காத ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக முதன்முறையாக குஜராத் அணியை வழிநடத்திய அந்த அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.