திரைப்பட துணை நடிகை ஷாலு ஷம்மு இவர், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமானவர்.
ஷாலு ஷம்மு கடந்த ஜனவரி மாதம் 2 லட்ச ரூபாய் கொடுத்து ஐபோன் ஒன்றை வாங்கி உள்ளார். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இரவு ஈஸ்டர் பண்டிகையன்று நண்பர்களோடு இணைந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு பார்ட்டிக்கு சென்ற நடிகை ஷாலு பின்னர் பார்ட்டியை முடித்துவிட்டு நள்ளிரவு 2 மணியளவில் தனது நண்பர்களுடன் சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் சென்று தங்கி உள்ளார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது நடிகை ஷாலு ஷம்முவின் விலையுயர்ந்த ஐபோன் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே நண்பர்களுடன் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். எங்கு தேடியும் செல்போன் கிடைக்காததால் நடிகை ஷாலு ஷம்மு கடந்த 11ஆம் தேதி பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தனர். செல்போனை மீட்கும் செயலியான ஐகிளவுடு மூலம் தேடியபோது, சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் செல்போன் கடைசியாக இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.
ஆகையால் தனது நண்பர்கள் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி நடிகை ஷாலு ஷம்மு பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து பட்டினம்பாக்கம் போலீசார் சந்தேகத்துக்குரிய நபர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.