ஆஸ்திரேலியாவின் சிட்னியில் துப்பாக்கிச் சூடு; 12 பேர் பலி - தீவிரவாதச் செயல் என அறிவிப்பு

இச்சம்பவத்தின் போது, ஒரு குழந்தை உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர். அவர்கள் கவலைக்கிடமான நிலையில் அறுவை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் துப்பாக்கிச் சூடு; 12 பேர் பலி - தீவிரவாதச் செயல் என அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள பிரபலமான பாண்டி கடற்கரையில் (Bondi Beach), யூத சமூகத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது. 

ஹனுக்கா பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கும் நிகழ்வில் இந்தத் தாக்குதல் நடந்தபோது, 1,000க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்தனர்.

இந்தச் சம்பவம், "சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டது" என்றும் “இதுவொரு தீவிரவாத சம்பவம்” என்றும் பொலிஸ் ஆணையர் மால் லன்யோன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்தத் தாக்குதலில் இரண்டு துப்பாக்கிதாரிகள் ஈடுபட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். எனினும், மூன்றாவது துப்பாக்கிதாரியின் சாத்தியக்கூறு குறித்து நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

இச்சம்பவத்தின் போது, ஒரு குழந்தை உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர். அவர்கள் கவலைக்கிடமான நிலையில் அறுவை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொல்லப்பட்ட துப்பாக்கிதாரியுடன் தொடர்புடைய ஒரு காரில், வெடிக்கும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஆணையர் லன்யோன் தெரிவித்தார். இதன் காரணமாக, வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தை ஆய்வு செய்தனர்.

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனேஸ் (Anthony Albanese) இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். இது "தீய யூத-எதிர்ப்பு தீவிரவாதம், நம் தேசத்தின் இதயத்தைத் தாக்கிய செயல்" என்று அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்கு யூத-எதிர்ப்பு உணர்வே காரணம் எனக் கூறிய அவர், எஇத்தகைய வன்முறை மற்றும் வெறுக்கத்தக்க செயல்களுக்கு நாட்டில் இடமில்லை"  என்று வலியுறுத்தினார்.

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் மிக அரிதானவை என்பதால், இந்தச் சம்பவம் மேலும் அதிர்ச்சியூட்டுவதாக பிரீமியர் கிறிஸ் மின்ன்ஸ் குறிப்பிட்டார்.

தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவருடன் சண்டையிட்டு, அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த ஒரு நபரின் துணிச்சலை பிரீமியர் மின்ன்ஸ் பாராட்டினார். 
அவர் ஒரு "உண்மையான ஹீரோ" என்றும், அவரது வீரத்தின் விளைவாக பலர் உயிர் பிழைத்துள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரித்தானியா பிரதமர் கீர் ஸ்டார்மர் உட்பட உலகத் தலைவர்கள் இந்தத் தாக்குதலை யூத-எதிர்ப்பு தீவிரவாதச் செயல் எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஹனுக்காவின் ஒளியின் பண்டிகையில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலால் யூத சமூகத்தின் மீது மீண்டும் இருள் சூழ்ந்துள்ளது என்று வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாண்டி கடற்கரையில் இருந்து தப்பி ஓடியவர்களில் ஒருவரான வில்லியம் டொலியென்டே பெட்டி, மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு பின்வாசல் வழியாக வெளியேறியதாகவும், அந்த நேரத்தில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அனைவரும் ஓடியதாகவும் விவரித்தார். 

மற்றொருவர், துப்பாக்கிச் சத்தம் முதலில் வாணவேடிக்கை போலத் தோன்றியதாகக் கூறியதுடன், துப்பாக்கிச் சண்டை நின்ற பிறகு, தான் சம்பவ இடத்தைக் கடந்து சென்றபோது தரையில் உடல்கள் கிடந்ததைப் பார்த்ததாகவும் தெரிவித்தார்.

பொலிஸ் ஆணையாளர் லன்யோன், கொல்லப்பட்ட துப்பாக்கிதாரியுடன் தொடர்புடைய ஒருவரைக் குறித்துப் பாதுகாப்புத் துறைக்குத் தெரிந்திருந்தாலும், அவர் உடனடி அச்சுறுத்தல் தரக்கூடியவர் என்ற கண்ணோட்டத்தில் இருக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகும் துப்பாக்கிதாரியின் பெயர் குறித்து எந்தவொரு கருத்து தெரிவிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.