அஸ்வெசும கொடுப்பனவு குறித்து புதிய அறிவிப்பு: மறுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் முதல் கட்ட கொடுப்பனவை பெற்றவர்கள், கொடுப்பனவு நிறுத்தப்பட்டவர்கள் மற்றும் முதல் கட்ட உதவித்தொகை வழங்கப்படாததால் மனக்குறை விண்ணப்பம் செய்தவர்களுக்கு முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த அனைத்து விண்ணப்பங்களும் மீண்டும் பரிசீலனை செய்யப்பட உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மீளாய்வு நடவடிக்கையின் மூலம் உண்மையில் தகுதியான பயனாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது தகுதி இல்லாத சிலர் கொடுப்பனவை பெற்றதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை சரிசெய்யும் நோக்கில் இந்த மீளாய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அஸ்வெசும அதிகாரிகள் நேரடியாக மற்றும் துல்லியமாக தகவல்களை சரிபார்த்து மீளாய்வு செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தவறான தகவல்களை வழங்கி கொடுப்பனவு பெற முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சரியான தகவல்களை வழங்கி அரசின் நலத்திட்ட பயன்களை பெறலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
