- Advertisement -
கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தில், தன்னை தொடர்புபடுத்தியதால், அந்த மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கரூர் அரசு காலனி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி இறப்பதற்கு முன்பு ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அந்தக் கடிதத்தில், ”பாலியல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பொண்ணு நானாதான் இருக்கணும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வைச்சாங்கன்னு எனக்குச் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கெடச்சா நல்லா இருக்கும்.
பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணணும்னு ஆசை. ஆனா முடியல. ஐ லவ் யூ அம்மா, சித்தப்பா, மாமா. உங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப் புடிக்கும். ஆனா, நான் உங்க கிட்டலாம் சொல்லாமப் போறேன். மன்னிச்சிடுங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி” என எழுதிக் கையெழுத்திட்டு இருந்தார்.
இதனையடுத்து மாணவி தற்கொலையை வழக்கு பதிவு செய்து வெங்கமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் குறித்து இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையே அந்த மாணவி படித்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அந்த மாணவி படித்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்த சரவணன் (வயது 42) என்பவர் திடீரென நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அவர் நேற்றைய தினம் திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுபட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் வீட்டில் தற்கொலை செய்தார். இந்த சம்பவம் துறையூர் மற்றும் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூரில் தற்கொலை செய்த பள்ளி மாணவியின் சாவுக்கு சரவணன் காரணமாக இருந்திருக்கலாம். கைதுக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து ஒரு டைரியை துறையூர் போலீசார் கைப்பற்றினர். அதில், மாணவியின் தற்கொலைக்கு நான் தான் காரணம் என மாணவர்கள் சந்தேகிப்பதுடன், கிண்டல் செய்கின்றனர். இதனால் என் மனம் உடைந்து விட்டது என எழுதி வைத்துள்ளதாக துறையூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் வெங்கமேடு போலீசார், மாணவியின் இறப்புக்கு அந்த ஆசிரியர் காரணம் இல்லை.
அவர் கண்டிப்பான ஆசிரியர் என விசாரணையின்போது மாணவர்கள் தெரிவித்தனர். ஆகவே விசாரணை தொடர்கிறது என்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.