- Advertisement -
கொவிட்-19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட நகரங்களுக்கு இடையிலான விரைவு ரயில்கள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரவு தபால் ரயில்கள் உட்பட 301 ரயில் பயணங்கள் இன்று சேவையில் சேர்க்கப்படவுள்ளன.
அத்துடன், இன்று முதல் அனைத்து அலுவலக ரயில்களும் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீண்ட தூர ரயில்களை இயக்கியதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக ரயில்களைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் அதிக ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு ரயில்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்திய அவர், எப்பொழுதும் ரயில்களை பயன்படுத்தும் போது பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.