“தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி சந்தர்ப்பமொன்றை வழங்கவேண்டும். தோட்ட அதிகாரிகளின் கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுமானால் பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம்.” – என்று சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நுவரெலியா ரதல்லையில் (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி சங்கத்தின் ஊடக பேச்சாளர் ரவீந்திர சேனரத்ன இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” தோட்ட முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள் உட்பட தோட்ட அதிகாரிகள் என்றால் யார், நாட்டின் பொருளாதாரத்துக்கு அவர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்கின்றனர் என்பது தொடர்பிலும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இதற்கு முன்னர் நாம் எடுத்துரைத்திருந்தோம். தோட்ட அதிகாரிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரினோம்.
ஆனால் இவை தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் உரிய கவனம் செலுத்தவில்லை. எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கலாம். அதைகூட செய்யவில்லை. தோட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் அவர்களால் பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அப்படி இருந்தும் பணி புறக்கணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நாம் ஈடுபடவில்லை. கௌரவமான முறையில் தொழிலில் ஈடுபட்டு வந்தோம்.
எனினும், இனியும் பொறுமைகாக்க முடியாது. நாளாந்தம் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. எனவே, எமது பிரச்சினைகள் தொடர்பில் செவிசாய்த்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பெருந்தோட்டத்துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம்.
உரப்பிரச்சினை உள்ளது. இதனால் தேயிலை உற்பத்தி 40 வீதத்தால் குறையும் அபாயம் உள்ளது. கிருமி நாசினிகள் இன்மையால் தேயிலை தோட்டங்களும் காடாகி வருகின்றன. இந்நிலையில் 1000 ரூபாய் சம்பளமும் வழங்க வேண்டும். உற்பத்தி குறையுமானால் பெருந்தோட்டத்துறையை எப்படி முன்னெடுப்பது?
இரசாயன உரமா, சேதன பசளையா என்பது பிரச்சினை அல்ல. தேயிலை ஆராய்ச்சி நிலையம் இருக்கின்றது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எமக்கு விஞ்ஞான பூர்வமான முறைமையொன்றை வழங்க வேண்டும். தற்போதைய நிலைமை தொடர்ந்தால் தொழிலாளர்களுக்கு 3 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கக்கூடியதாக இருக்கும். தேயிலை தொழிலுடன் நேரடியாகவும், முறைமுகமாகவும் சுமார் 20 லட்சம் பேர் தொடர்புபட்டுள்ளனர். இதனால் அவர்கள் பாதிக்கப்படக்கூடும்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு நேரம் வழங்கப்பட வேண்டும். தோட்ட அதிகாரிகள்தான், தோட்ட தொழிலாளர்களுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர். தற்போது முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. தோட்ட அதிகாரிகள் தாக்கப்படும் மூன்றாவது சம்பவமும் பதிவாகியுள்ளது. எமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இல்லையேல் கடும் நடவடிக்கையில் இறங்குவோம்.” – என்றார். (க.கிஷாந்தன்)
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.