இழுவைப் படகுகளையும் தடைசெய்யப்பட்ட வலைகளையும் தடைசெய்யும் 2017ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க சட்டமூலத்தை முறையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி, முல்லைத்தீவு – கள்ளப்பாட்டி, இருந்து பருத்தித்துறை துறைமுகம் வரையில் படகுப் பேரணியொன்று, இன்று (17) முன்னெடுக்கப்பட்டது.
காலை 7.15 மணியளவில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன் ஆகியோர் தலைமையில் கள்ளப்பாட்டில் இருந்து ஆரம்பமான இந்தப் படகுப் பேரணியில், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சந்திரலிங்கம் சுகிர்தன், கேசவன் சயந்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் உள்ளுராட்சி மன்ற தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் மீனவர்களும் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணியில் பருத்தித்துறை துறைமுகத்துக்கு அப்பால் உள்ள சுப்பர்மடம், பொலிகண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும், தமது படைகளுடன் கற்கோவளம் கடற்பகுதியில் காத்திருந்து, பேரணியுடன் இணைந்துகொண்டனர்.
கள்ளப்பாட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்ட இந்தப் படகுப் பேரணி, காலை 9.30 மணியளவில், பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்ததது.
பேரணியாக வந்தோர் ‘இழுவைப் படகுகளை தடைசெய்’, ‘எங்கள் கடல் எங்களுக்கே உரிமை’ ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு பருத்தித்துறை துறைமுகத்தை கரை சேர்ந்தனர்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் ரோலர் மீன்பிடி முறையின் காரணமாக, வட மாகாண மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களுக்கு நீதி கோரியே, கடல்வழியாக இந்த கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.